சென்னையில் ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2வது நாளாக ஆலோசனை..!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரண்டாவது நாளாக தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஆளும்கட்சியான அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. 

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (செப். 28) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது.

அதிமுக முதல்வர் வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேர்ந்து, அக். 7 அன்று அறிவிப்பார்கள் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நேற்று (செப். 29) தனது ஆதரவு நிர்வாகிகளான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மற்றொரு துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கமும் திடீரென அங்கு வந்தார்.

அக்.7-ம் தேதி எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் தொடர்பாகவே ஓபிஎஸ் இல்லத்தில் மூத்த நிர்வாகிகள் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமைச்சர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து பேசினர்.

இதன்பின், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வந்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், முதல்வர் பழனிசாமியையும் அவர் சந்தித்தார். அப்போது, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று மாலை திடீரென முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் கடம்பூர் ராஜு உள்ளிட்ட சிலரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (செப். 30) துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே