முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு – முதல்வர் கண்டனம்..!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இலங்கை அரசால் இடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என அங்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைகவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கி உள்ளதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசின் செயலுக்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவுகூறும் வகையில் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் ‘இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. 

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியிருக்கிறார்செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே