வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி, சில வாகனங்களுடன் திருத்தணி சென்று சாமி தரிசனம் செய்து, யாத்திரையைத் தொடங்க முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

பாஜக சார்பில் நவ.6 முதல் டிச.6 வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வேல் யாத்திரை மூலம் தமிழகம் முழுவதும் பாஜகவினர் சாதி, மதக் கலவரத்தைத் தூண்ட உள்ளதால் அதை அனுமதிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பாஜகவின் வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இதில் பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து தடையை மீறி வேல் யாத்திரை நடத்த பாஜக தலைவர் எல்.முருகன் முடிவு செய்ததின் அடிப்படையில் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்திலிருந்து வேல் யாத்திரையைத் தொடங்கினார்.

”கடவுள் முருகனைக் கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் திருத்தணிக்குப் புறப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் கடவுளை வழிபட உரிமை உள்ளது. எனக்கு விருப்பமான முருகனை வழிபட, திருத்தணி கோயிலுக்குச் செல்ல உள்ளேன். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே கோயிலுக்குச் செல்கிறேன்” எனக் கூறினார்.

பின்னர் கையில் வேலுடன், காவிச் சட்டையுடன் தனி வேனில் ஏறிப் புறப்பட்டார். அவருடன் ஹெச்.ராஜா, கரு.நாகராஜன், அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோர் சென்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் சென்றதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூவிருந்தவல்லி வழியாக வந்த வேல் யாத்திரையை பூவிருந்தவல்லி – திருமழிசை கூட்டுச் சாலையில் இரும்புத் தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்தனர்.

அங்கு போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில், தான் சாமி கும்பிடுவதற்கு மட்டுமே செல்வதாகக் கூறிய பாஜக தலைவர் முருகனை போலீஸார் அனுமதித்தனர். பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனைப் பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இதனால் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் முருகனின் வேல் யாத்திரைக்கு சில வாகனங்களை மட்டும் அனுமதித்தது குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தன.

திருத்தணி அருகே 10க்கும் குறைவான வாகன அணிவகுப்புடன் முருகன் சென்றார். அங்கு அவருடன் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டார். பின்னர் திருத்தணியில் சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் முருகன், அமைச்சர் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, ஹெச்.ராஜா, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோரை மட்டும் போலீஸார் அனுமதித்தனர்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு யாத்திரையைத் தொடங்க முருகன் கிளம்பினார். அவரையும் உடன் வந்த ஹெச்.ராஜா, அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோரையும் போலீஸார் தடுத்துக் கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே