டெல்லி : ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா ; யாரும் அச்சப்படத்தேவையில்லை – கெஜ்ரிவால்

டில்லியில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியிருந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 72 ஆயிரமாக இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டில்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 3,067 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று (ஜூலை 6) வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பேசிய கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான மீதமுள்ள 25 ஆயிரம் நோயாளிகளில் 15 ஆயிரம் பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இறப்பு விகிதமும் குறைய துவங்கியுள்ளது.நாட்டிலேயே முதல் பிளாஸ்மா வங்கியை துவங்கியுள்ளோம்.

பிளாஸ்மா சிகிச்சை மூலம் மிதமான கொரோனா பாதிப்புள்ள நோயாளிகள் கணிசமாக குணமடைய உதவியிருப்பதை நம் சோதனை முடிவுகள் காட்டுகிறது. பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை தானம் செய்ய முன்வருபவர்களை விட அதிகம்.

தகுதியுள்ள அனைவருமே முன் வந்து பிளாஸ்மா தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது எந்த வலியையும் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. பிளாஸ்மாவை நன்கொடை அளிப்பவர்கள் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவை செய்பவர்கள்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என கெஜ்ரிவால் நேற்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

‘கடந்த வாரம் தினமும் சுமார் 2,300 புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை 6,200 லிருந்து 5,300க்கு குறைவில்லாமல் இருந்தது.

ஆனால் இன்று 9,900 கொரோனா படுக்கைகள் காலியாக உள்ளது’ என மற்றொரு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டில்லியில் ஐ.சி.யூ இருக்கைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்று டில்லி அரசு தெரிவித்திருந்தது.

டில்லியின் மூன்று முக்கிய கொரோனா சிறப்பு மருத்துவமனைகளான லோக் நாயக் (எல்.என்.ஜே.பி), குரு தேக் பகதூர் (ஜி.டி.பி) மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஐ.சி.யூ இருக்கைகள் 169 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி மக்கள் தொகை, கொரோனா பரிசோதனை மாதிரி முடிவுகளில் சராசரி தொற்று நேர்மறையாக வருவது படிப்படியாக குறைந்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் 21.6 சதவீதம் என்பதில் இருந்து தற்போது 11.6 சதவீதமாக குறைந்திருப்பது அதிகாரிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே