குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நீடித்து வரும் நிலையில் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்தால், வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் ஊடுருவியுள்ளவர்களுக்கு, இந்திய குடியுரிமை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து ஏற்படும் எனவும்; அச்சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும் அசாம், திரிபுரா மாநிலங்களில் வாழும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், திப்ரூகரில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் கூட்டமைப்பினர் இன்றும் 6 மணி நேர வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே