வேலை மோசடி வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியை விடுவிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது..

கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய தி.மு.க – எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி, பலரிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும், மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை,கரூர்,திருவண்ணாமலை,கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது மோசடி நடைபெற்ற காலகட்டத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்க நகைகளின் ரசீதுகள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெற்ற சுய விபரக் குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களின் பட்டியல் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர் என்பதால், எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..

மனுவை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் வழக்கில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க மறுத்து செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்..

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே