தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த 4 ஆயிரத்து 250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்ப கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும் இந்த முறைகேடு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 19 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த மாணவர்களின் கைரேகை அனுப்பி வைக்க தேசிய தேர்வு முகைமையை கேட்டு உள்ளதாகவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 4250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிஐயிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகைமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.
ஆள் மாறாட்ட மோசடியில் சிக்கும் மாணவர்களின் புகைப்படங்களை, பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் வேறு மாநிலங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளதால் இந்த வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது?? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான இடங்களில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.