கொரோனா வைரஸ் : பலியானோரின் எண்ணிக்கை 361 ஆக உயர்வு..!

சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோரின் எண்ணிக்கை 361ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் வூகான் நகரில் இருந்து அந்நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.

இதுதவிர 17 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

ஒரே நாளில் மேலும் 2 ஆயிரத்து 829 பேருக்கு நோய் பரவியிருப்பதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள வூஹான் நகரில் ஒன்பதே நாட்களில் அங்கு அதிநவீன மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் படுக்கைகளுடன் 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன.

இன்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது.

சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர். 1,400 பணியாளர்களுடன் ஏராளமான மருத்துவர்களும் இந்த மருத்துவமனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர 1500 படுக்கை வசதி கொண்ட மற்றொரு மருத்துவமனையை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் மருத்துவமனைகளும், நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளன.

செல்போன்களில் வீடியோ அல்லது குரல் அல்லது உரைநடை மூலம் இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், முகமூடி அணிந்திருக்குமாறும் சுகாதாரத்துறையினர் வீடுகளுக்கு சென்று அறிவுறுத்துகின்றனர். 

சீனாவுக்கு வெளியே 27 நாடுகளில் கொரானா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், இதுவரை உயிர் பலி நேரிடாமல் இருந்தது.

இந்நிலையில், சீனாவின் வூகானில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அண்மையில் வந்த 44 வயதான நபர் ஒருவர் பலியானார்.

இந்த உயிரிழப்பானது, சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸுக்கு நேரிட்ட முதல் பலியாக கருதப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் 9 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹூபே மாகாணத்துக்கு சென்றுவிட்டு மாசாசூசெட்ஸ் திரும்பிய அந்த நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 4 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்குள் சீனாவிற்கு சென்றிருந்த வெளிநாட்டவர் அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

27 நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருப்பதால் அந்தந்த நாடுகளின் அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே