கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டிலும் இல்லை; இந்தியாவிலும் இல்லை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (வீடியோ)

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் சனப்பிரட்டி அருகே ரூ.269.58கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டிட மாதிரியை இருவரும் பார்வையிட்ட பின்னர் மாணவ-மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.

மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளிடம் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பது குறித்தும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபஸ்கர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து, இந்த மருத்துவக்கல்லூரிக்குத் தேவையான திட்டங்களை, அதிநவீன வசதிகளை தொடர்ந்து பெற்றுவருகின்றார்.

அந்த வகையில், ஏற்கனவே சி.டி.ஸ்கேன் வழங்கப்பட்டள்ளது. தற்போது ரூ.6கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சித்தலைவரும் அதிநவீன இருதய சிகிச்சை பிரிவு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

விரைவில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அதிநவீன இருதய சிகிச்சை பிரிவு வழங்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில் 9 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிக மருத்துவக்கலலூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்திய அளவில் உள்ள மருத்துவக்கல்லுரிகளில் ஆண்டுதோறும் 100 மாணவர்களை சேர்க்கும் அளவிற்குத்தான் கல்லூரிகள் உள்ளது.

நமது தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஆண்டில் 150 மாணவர்கள் பயிலும் அளவிற்கு கல்லூரிகள் உருவாக்கப்பட்டள்ளது.

கொரனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டிலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை.

சைனாவில் கொரனா பாதிப்பு வந்தவுடனேயே தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

சீனாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு விமானம் வருகின்றது. அந்த விமானம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் கொரனா வைரஸ் குறித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

நெபோலா, நிப்பா வைரஸ் பரவியபோதும் எந்தவித பாதிப்பும் தமிழகத்தில் இல்லாத அளவிற்கு தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

எனவே, கொரனா வைரஸ் குறித்து மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளவேண்டியதில்லை.
என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(மருத்துவம்) மகாவிஷ்னு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே