கொரோனா வைரஸ் – இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 1,500 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் இருந்து அந்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியது.

இதனால், 6 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயராமல் சீன அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்றவர்கள் மூலம் தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா அமெரிக்கா, ஜெர்மனி, இலங்கை போன்ற 17 நாடுகளுக்கு கொரோனோ வைரஸ் பரவியுள்ளது.

அமெரிக்காவில் 4 பேர் உள்ளிட்ட 70 பேர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனோ வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

விமான நிலையங்களிலேயே உரிய சோதனைக்குப் பிறகே பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

சீனாவின் ஊஹான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரும்பிய 430 பேர் கேரளாவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர், பாட்னா, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் 12 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவின் ஹூபேய் மாநிலத்தில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், சீன அரசு மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்கள், 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

சீனாவில் இருந்து தோல் ஆராய்ச்சி மேல்படிப்புக்காக சென்னை வந்த இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.

பல மணி நேரம் காத்திருந்த நிலையில், சோதனை முடிந்தபின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே சீனாவுக்கு வந்துள்ள உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் குழு அதிபர் சீ ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் வெளிநாட்டவர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் சீனாவை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்த கொடிய நோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் சீனாவுக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விரைவில் உலகின் தேர்ந்த மருத்துவக் குழுக்களை சீனாவுக்கு அனுப்ப இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே