கோயம்பேடு வியாபாரிகள் 3 பேருக்கு கொரோனா…! செயல்படுமா சந்தை…?

கொரோனா நோய் பரவல் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையை இட மாற்றம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் சிறு மொத்த வியாபாரிகள் விடுமுறை அறிவித்து உள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் இதுவரை 3 நபருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தீவிரம் மேலும் அதிகரிப்பதால் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு மொத்த வியாபாரிகள் என சந்தையை இரண்டாக பிரித்து இடமாற்றம் செய்ய அரசு முடிவெடுத்தது.

வேளாண்துறை முதன்மை செயலாளர், சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் இடையே நேற்றைய தினம் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

அதன் காரணமாக இன்று காலை மீண்டும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையில் கோயம்பேடு சந்தையில் இயங்கி வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு மொத்த வியாபாரிகள் கடைகளை இரண்டாகப் பிரித்து இயக்க முடிவெடுக்கப்பட்டது.

மொத்த வியாபாரிகளுக்கு கோயம்பேட்டிலும் மற்றும் மீதமுள்ள சிறு மொத்த வியாபாரிகளுக்கு அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்கள், மைதானங்களில் விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறு மொத்த வியாபாரிகள் கோயம்பேடுக்கு அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலும், சிஎம்டிஏ பார்க்கிங் இடத்திலும் விற்பனை செய்ய அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சிறு மொத்த வியாபாரிகளின் இந்த முடிவுக்கு அரசு உடன்படாத நிலையில் ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை கடைகளுக்கு விடுமுறை அறிவித்தனர். 

மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கடைகளை இடம் மாற்றுவதன் மூலம் போக்குவரத்து மற்றும் இடமாற்ற செலவுகள் அதிகரித்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் எனவே கோயம்பேடு சந்தையை இடம் மாற்றும் முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்த வியாபாரிகள் கோயம்பேடு அருகிலேயே இடம் கொடுத்து அழைத்தால் விற்பனையை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வியாபாரிகள் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே