சீனாவிலிருந்து வந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய பொறியாளர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அது சாதாரண காய்ச்சல் என்று தெரிய வந்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

8,100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், சீனாவில் இருந்து இதுவரையில் 242 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் பொது சுகாதாரத்துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் கொரனா வைரஸின் பாதிப்பு யாருக்கும் இல்லை.

மக்கள் பீதியோ அச்சம் அடையவோ தேவையில்லை, அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விமல் என்ற மாணவர் சீனாவில் இருந்து வந்தவர்தான்.

ஆனால் அவருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை, அவரை பரிசோதித்ததில் அவருக்கு இருந்தது சாதாரண சளித் தொந்தரவு தான் என்பது கண்டறியப்பட்டது.

அதேபோல கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவருக்கும் கொரானா வைரஸின் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே