தஞ்சாவூரில் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர்களில் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு தெரிய வந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 9 பேர்.

இந்நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த முதல் நபர் குணமடைந்ததால், வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களையும், சந்தித்தவர்களையும் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி வளாகத்திலும் தனிமைப்படுத்தியது. 

மேலும், இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில், கடந்த இரு நாட்களில் கிட்டத்தட்ட 200 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 14 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, கரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்தது:

நாம் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்ததன் காரணமாக இத்தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, 14 பேருக்கு தொற்று இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை.

அவர்களைத் தனிமைப்படுத்தியதால், சமூகத் தொற்று தடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் கல்லூரியும் தொலைநோக்குப் பார்வையுடன் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றனர் மருத்துவர்கள்.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு வயதான பெண்களும், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது சிசுவும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

ஆனால், 4 பேருக்கும் கரோனா இல்லை என்றும், இயற்கை மரணங்கள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே