கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக கிடைக்க வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
பிகார் பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கரோனா தடுப்பூசி என்ற வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது பற்றிய விவாதங்கள் எழத் தொடங்கின.
இந்த நிலையில் வடகிழக்கு தில்லிப் பகுதியில் 2 பாலங்களைத் திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவால், “நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வேண்டும்.
இது ஒட்டுமொத்த நாட்டின் உரிமை. கரோனா தொற்றால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, கரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.