கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கக்கோரிய வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதனால் தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், போதுமான ஆக்சிஜன், வெண்டிலேட்டர், ரத்தம் உள்ளிட்ட மருந்துகளை இருப்பில் வைக்கவும், கரோனா பாதிப்பை உடனடியாக உறுதிப்படுத்த பரிசோதனை மையங்களை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே