டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தை தருவேன் – சீமான் பேச்சு..!!

டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘உலகிலேயே ஊழலில் பெருத்த நாடுகள் இந்தியா, நைஜீரியா. ஊழலில் குறைவாக உள்ள நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள டென்மார்க்.

டென்மார்க்கின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம், தவிக்கிறோம்.

ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்கு ஒரு படைப்பிரிவை உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி.

மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியாகத்தான் உள்ளது. ஆனால், அதிமுகவிடமிருந்து ஆட்சியை வாங்கி திமுகவிடம் கொடுப்பதும், திமுகவிடமிருந்து ஆட்சியை வாங்கி அதிமுகவிடம் கொடுப்பது மாற்றம் அல்ல.

இரண்டு கட்சிகளின் ஆட்சியாளர்களும் மதுபானத் தொழிற்சாலைகளை வைத்துள்ளனர். எனவே திமுக, அதிமுக மாற்று அல்ல’ என்று பேசினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே