கொரோனா விதிமுறை மீறல்: விஜய் சேதுபதி படக்குழுவுக்கு சுகாதாரத்துறை அபராதம்

பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படத்தின் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியஅளவில் நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுவரையில் 1.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 2,300 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் தீவிரமாக்கப்பட்டுவருகின்றனர்.

இதற்கிடையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றிய பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. பழனியை அடுத்த காரமடைப் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பதை அறிந்த மக்கள் அங்கு கூடினர்.

அதனால், காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், ஊழியர்கள் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. அதனையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே