சந்தானம் பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு – தொடர்ந்து பாதிக்கப்படும் பிரபலங்கள்

சந்தானம் படத்தில் நடித்த வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியஅளவில் நாள் ஒன்றுக்கு 60,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதுவரையில் 1.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 2,300 பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீண்டும் தீவிரமாக்கப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்தநிலையில், தமிழில் சந்தானம் நடித்த ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வைபவி சாண்டில்யா. அதனைத் தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கேப்மாரி’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘கடந்த புதன்கிழமை எனக்கு காய்ச்சல் இருந்தது. உடல் வலியும் இருந்தது. மிகவும் சோர்வாக உணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தது. பின்னர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனக்கு மட்டுமல்ல, என்னுடைய அப்பா, அம்மாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எங்களுடைய உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், சச்சின் டெண்டுல்கர், அமீர்கான், மாதவன் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே