இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை – ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை அடையவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,67,296 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,76,377 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், இதனை சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

உலகில் அதிக மக்கள் தொகை உள்ள இரண்டாவது நாடு இந்தியா என்றும், ஒரு மில்லியன் மக்களில் 538 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக கூறிய அவர், உலகளவில் 10 லட்சம் பேரில் 1,453 பேர் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் இதுவரை 62.08% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமூகப் பரவல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை அடையவில்லை எனவும்; மருத்துவ நிபுணர்களும் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை எனவும் கூறுவதாக தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளில் தொற்று அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த நாட்டையும் ஒப்பிடும்போது சமூகப் பரவல் நிலையை இன்னும் அடையவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில மாநில முதல்வர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே