விழுப்புரம் மருத்துவமனையிலிருந்து தப்பித்த கொரோனா நோயாளி சென்னையில் கைது!

கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி வாலிபர் நிதின் ஷர்மாவை, செங்கல்பட்டு அருகே படாளம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

டெல்லியைச் சேர்ந்த 31 வயதுடைய நிதின் ஷர்மா என்ற வாலிபர் கடந்த டிசம்பர் மாதம் வேலை தேடி புதுச்சேரிக்கு வந்தார். அப்போது சாலை விபத்தை ஏற்படுத்தியதாக அவரை புதுச்சேரி போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறையில் இருந்தவாறே புதுச்சேரி ராஜ்நிவாசில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதில் சில மணி நேரங்களில் வெடிக்கப்போவதாகவும் தொலைபேசி மூலம் ராஜ்நிவாசுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுத்திருந்தார். 

இதனால் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.

இதனைதொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், புதுச்சேரியில் சில நாட்கள் சுற்றி, திரிந்துவிட்டு, விழுப்புரத்திற்கு வந்தார். விழுப்புரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிலருடன் தங்கியிருந்துள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெளிமாநிலத்தவரின் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அவர், கடந்த 6 ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனக்கூறி கடந்த 7 ஆம் இரவு சுகாதாரத்துறையினர் விடுவித்துள்ளனர்.

ஆனால் நிதின் ஷர்மா விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, வந்த பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடனே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவர் தங்கியிருந்த இடத்திற்கு சுகாதாரத்துறையினர் சென்றபோது அங்கு அந்த வாலிபர் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சுகாதாரத்துறை அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் நிதின் ஷர்மாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 10 தனிப்படைகள் அமைத்து, விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் அங்குள்ள போலீசாரின் உதவியுடன் கடந்த 8 நாட்களாக தேடி வந்தனர்.

மேலும் தினசரி விளம்பரம் செய்தும், போஸ்டர்கள் ஒட்டி தேடி வந்த நிலையில், நிதின் ஷர்மா செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினருடன், படாளம் பகுதிக்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீசார், படாளம் பகுதியில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் தூங்கிகொண்டிருந்த நிதின் ஷர்மாவை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார், அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு அங்கு மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே நிதின் ஷர்மா தலைமறைவான கடந்த 8 நாட்களாக அவர் எங்கெல்லாம் சென்றார்.

அவருடன் பழகியவர்கள் யார்? யார்? என கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே