ஆக்ஸிஜன் உருளையை அகற்றியதால் கொரோனா நோயாளி பலி..!!

மத்திய பிரதேசத்தில் கொரோனா நோயாளிக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவியை வார்டு பாய் அகற்றியதால் அந்த நோயாளி பலியாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் அலை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் உள்ளது.

கொரோனாவின் நிலை தீவிரமடைந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்தகைய சமயத்தில் செயற்கை கருவிகளையும் மருந்துகளையும் கொடுத்து சுவாச சீராக மருத்துவர்கள் உதவுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சிவபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி உயிரிழந்தார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது வார்டு பாய் செயற்கை சுவாசத்தை அகற்றியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவமனையில் இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 48 மணி நேரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய 3 பேர் கொண்ட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை தகனம் செய்ய மாட்டோம் என குடும்பத்தினர் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே