தேச துரோக வழக்கில் கைதான ஷார்ஜில் இமாமுக்கு கரோனா தொற்று

குவாஹட்டி மத்திய சிறையில் ஷர்ஜீல் இமாமுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

“ஷர்ஜீல் இமாமுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷர்ஜீல் இமாம் குவாஹட்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜூலை 25-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதால், தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு அவரை ஆஜர்ப்படுத்துவதற்கான அனுமதியை அசாமிடம் கோரியிருந்தது.

ஆனால், தற்போது அவரை ஆஜர்ப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு (80) கடந்த 16-ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது

ஆத்திரமூட்டும் உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

ஷகீன் பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏற்பாட்டிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே