கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு

கொரேனா நோய்த்தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிக்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதை கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தி சோதனை அடிப்படையில் நோயைக் குணப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய மருத்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் தமிழக அரசு அனுமதி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு சோதனை அடிப்படையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப் பட்டதாகவும், இதுவரை 18 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரிடமிருந்து ரத்தக்கூறுகளைத் தனியாகப் பிரித்தெடுக்கும் கருவி மூலம் 500 மில்லி லிட்டர் பிளாஸ்மா சேகரிக்கப்படுவதாகவும், அந்தப் பிளாஸ்மா நோயின் தன்மை மிதமாக உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் பிளாஸ்மா தெரபி மூலம் ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாகவும்; விரைவில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிளாஸ்மா ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் பிளாஸ்மா வங்கி அமைய உள்ளதாகவும்; இது டெல்லிக்கு அடுத்து இந்தியாவிலேயே இரண்டாவது பிளாஸ்மா வங்கியாக விளங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே