இளைஞரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்..!!

சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் ஊரடங்கை மீறி வெளியே வந்த ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் அந்த நபரின் செல்போனை பிடுங்கி எறிந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து, ஆட்சியர் மன்னிப்புக் கோரினார். இருப்பினும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா நேற்று நகரில் கரோனா ஊரடங்கை ஆய்வு செய்தார். அப்போது ஒருநபர் சாலையில் வந்ததைப் பாரத்த ஆட்சியர் காரைவிட்டு இறங்கினார். அந்த நபரிடம் விசாரித்த ஆட்சியர் ரன்பீர் சர்மா திடீரென அந்த நபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, செல்போனை பறித்து தூக்கி எறிந்தார். அதுமட்டுமல்லாமல் அருகே இருந்த போலீஸாரை அழைத்து அடித்து அனுப்புமாறு ஆட்சியர் கூறினார்.

இளைஞரை மாவட்ட ஆட்சியர் கன்னத்தில் அறைந்த நிகழ்வை யாரோ வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில பரப்பினர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலாகி, மாவட்ட ஆட்சியர் எவ்வாறு பொதுமக்களை அடிக்க முடியும் என்று கேள்வி எழுந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில் ‘ லாக்டவுன் விதிகளை மீறிய நபரை நான் கன்னத்தில்அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த நபர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை, வெளியே வந்ததற்கான காரணம் கூறவில்லை, தனது பாட்டிவீட்டுக்குச் செல்வதாகக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்து அந்த நபரை அடித்துவிட்டேன்.

இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். சூரஜ்பூரில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. நானும், எனது பெற்றோரும்கூட கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டோம். கரோனா பிரச்சினையை சமாளிக்க மாநில நிர்வாகமே தீவிரமாகப் பணியாற்றி வருகிறது’ எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா சர்மா குறித்த வீடியோ வைரலானதையடுத்து, அவரை இடமாற்றம் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பூபேஷ் பாகல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா இளைஞர் ஒருவரை அடித்த காட்சி குறித்த வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இது கண்டிக்கத்தக்து, துரதிர்ஷ்டவசமானது.

சத்தீஸ்கரில் இதுபோன்ற சம்பவங்களை பொறுக்கமுடியாது. இந்த ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்துக்கு வருந்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் உத்தரவின்படி இளைஞரைதாக்கிய போலீஸார்

மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா நடந்து கொண்ட விதத்துக்கு ஐஏஎஸ் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ட்விட்டரில் ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு பதிவிட்ட கண்டனப் பதிவில் ‘ சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதத்துக்கு ஐஏஎஸ் கூட்டமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது. சேவைக்கும், நடத்தையும் எதிராக இருக்கும் இந்தச்செயலை ஏற்க முடியாது. குடிமைப்பணியில் இருக்கும் அதிகாரிகள் அதிலும் இதுபோன்ற கடினமான காலத்தில், மக்களிடம் கருணையுடனும், ஆறுதல் அளிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே