தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 6 மாணவர்களுக்குக் கரோனா தொற்று

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 6 மாணவர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஏற்கெனவே 11 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவ, மாணவியர்கள் மற்றும் மூன்று கல்லூரியைச் சேர்ந்த 13 கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (23-ம் தேதி) கும்பகோணம் தனியார் கல்லூரியில் மேலும் 5 மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல் ஒரத்தநாடு அரசு கால்நடை ஆராய்ச்சிக் கல்லூரியில் இன்று ஒரு மாணவருக்குத் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்தக் கல்லூரியில் 63 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே பள்ளி மாணவர்கள் 180 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து கோவிட் 19 தொற்று அதிகரித்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி நேற்று (22-ம் தேதி) முதல் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே