பிரபல தடகள வீரர் உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரபல தடகள வீரர் உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஜமைக்கா நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21-ம் தேதி பிரபல தடகள வீரரும் 8 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றவருமான உசேன் போல்டின் 34-வது பிறந்த நாள் விழா அவரது சொந்த நாடான ஜமைக்காவில் கொண்டாடப்பட்டது.

அப்போது, உசேன் போல்ட் குடும்பத்தினர், நண்பர்கள் மான்செஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், பேயர் லெவர்குஷன் விங்கர் லியான் பெய்லி, கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பலரும் முகக்கவசம் அணியாமல் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தனர். 

இந்நிலையில், தடகள வீரர் உசேன் போல்டுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இதையடுத்து, உசேன் போல்ட் தனது ட்விட்டரில் சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “எனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் கூறுகிறார்கள்.

அதற்காகவே நான் சனிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

அதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. கொரோனா பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி நான் தனிமையில் இருக்கிறேன்.

நான் முடிவு அறிவிக்கும் வரை என்னுடைய நண்பர்களும் இதேபோல் தனிமையில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உசேன் போல்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் டப்டன் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே