புதிய வகை கொரோனா..; பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா..!!

லண்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது புதிய வகை கொரோனா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனால் அங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு கிறிஸ்துமஸ் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன.

புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் கூட அது தற்போதைய வைரஸை காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது.

இதனால் இங்கிலாந்தில் மக்கள் அச்சமடைந்தனர்.

இதனால் இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை லண்டனுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

இங்கிருந்தும் லண்டன் செல்லவும் அங்கிருந்து இந்தியாவுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவரது சளி மாதிரிகள் கிண்டி கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த முடிவுகள் வந்த பின்னரே அந்த நபருக்கு இருப்பது தற்போதுள்ள கொரோனா வைரஸா இல்லை புதிய வகை கொரோனா வைரஸா என்பது தெரியவரும்.

இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா சோதனை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம்.

ஆனால் லண்டனில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை செய்து தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது லண்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை பன்னாட்டு முனையத்துக்கு விமானத்தில் வந்த 3 பெண்கள் உள்பட 8 பேரும், உள்நாட்டு முனையத்திற்கு வந்த 2 குழந்தைகள், பெண் உள்பட 7 பேரும் விமான நிலையத்தில் தனியாக தங்கவைக்கப்பட்டனர்.

பின்னர் 15 பேருக்கும் கொரோனா சோதனை செய்துவிட்டு தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் விமான நிலையத்தில் கொரோனா சோதனை மையத்தை பார்வையிட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார்.

கொரோனாவில் இன்னொரு வகையான வைரஸ் லைன் ஏஜ் பி117 என்ற அதிகவீரியத்துடன் லண்டனில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

76 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வருபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பப்படுகின்றனர்.

இந்த முறையை மாற்றி மீண்டும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

5 மணி நேரத்தில் கொரோனா சோதனை முடிவை அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று இல்லை என்றால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

லண்டனில் இருந்து நேரிடையாக விமானங்கள் இல்லை என்றாலும் லண்டனில் இருந்து வேறு நகரங்கள் மூலமாக சென்னைக்கு வரக்கூடியவர்கள் குறித்து கண்காணித்து வருகிறோம்.

லண்டனில் இருந்து டெல்லி வழியாக வந்த விமானத்தில் கடந்த ஒரு வாரமாக லண்டன் பயணிகளுடன் அமர்ந்து வந்தவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, அச்சம் ஏற்பட்டாலோ சோதனையை செய்து கொள்ள வேண்டும்.

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே