தமிழகத்தில் நேற்று 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 27 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
இதனால், சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது.
இவை தவிர, செங்கல்பட்டில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் மூன்று பேருக்கும், நாமக்கல்லைச் சேர்ந்த இருவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பிறந்து 5 நாட்களேயான பிஞ்சுக் குழந்தை உள்ளிட்ட, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 5 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.