உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 6 வீரர்களுக்கு கொரோனா!

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் புள்ளிகள் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும். அதே நேரத்தில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இத்தொடரில் பங்கேற்றிருப்பதால் பார்வையாளர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடைபெறுகின்றன.

டெல்லியில் நடைபெற்று வரும் ISSF உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டித்தொடரில் மேலும் 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்புக்குள்ளான வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் ISSF உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சிங்கப்பூர், ஈரான், ஃபிரான்ஸ், ஹங்கேரி, தாய்லாந்து, துருக்கி உட்பட 53 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ரைஃபிள், பிஸ்டல் மற்றும் ஷாட் கன் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் புள்ளிகள் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும். அதே நேரத்தில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இத்தொடரில் பங்கேற்றிருப்பதால் பார்வையாளர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் சர்வதேச வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இரண்டாவது நாளான நேற்று அதில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் மூவருக்கு நேற்று காலை கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதில் இந்திய ஆடவர் அணியைச் சேர்ந்த இரண்டு முக்கிய வீரர்களும் அடங்குவர் என தெரியவந்தது

இந்நிலையில் நேற்று இரவு வெளியான சோதனை முடிவுகளின்படி மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா விதிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அறைகளின் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் வீரர்கள் மட்டும் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் கொரோனா விதிமுறைகளை சரிவர கடைப்பிடிக்காததாலேயே அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தடகள சம்மேளனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் வீரர்களுக்கு தினந்தோறும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் போட்டி அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே