70 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு அக்டோபருக்குப் பிறகு மெல்ல மெல்ல குறைந்து வந்தது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடர்பாக விளக்கம் அளித்தார்.

மொத்த கொரோனா பாதிப்புகளில் 60 சதவிகிதம் மகராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியிருப்பதாக விளக்கம் அளித்தார்.

இதுவரை 3.51 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சுகாதாரத் துறைச் செயலாளர், கடந்த 15 நாட்களில் 16 மாநிலங்களிலுள்ள 70 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 150 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சோதனை, தொடர்பு அறிதல், சிகிச்சை அளித்தல் நடைமுறையை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் திவீரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பஞ்சாப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 6.8 சதவிகிதமாக இருப்பது கவலையளிப்பதாகவும், இது கொரோனா நடத்தை விதிகள் அங்கு பின்பற்றப்படவில்லை என்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே