ஒகேனக்கல் அருவியில் செப். 27-ஆம் தேதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்.
பரிசல் பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு;
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வாழ் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் பொதுமக்களின் சுற்றுலா ஆா்வத்தை முன்னிட்டும் உலக சுற்றுலா தினமான செப். 27 -ஆம் தேதிமுதல் தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல், நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை மடம் சோதனைச்சாவடி, ஆலம்பாடி சோதனைச் சாவடி மற்றும் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உரிய அலுவலா்களிடம் காண்பிக்க வேண்டும்.
கரோனா தடுப்பூசிகளை இரண்டு தவணைகள் செலுத்திக் கொண்டவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளா்கள், சமையல் தொழிலாளா்கள், வணிகா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது உறுதி செய்யப்படும். இதேபோல அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட நெகிழிகளைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் சுற்றுலா தலத்தை தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி இல்லை. அருவியில் பரிசல்களில் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கைகழுவுதல் உள்ளிட்டவை அவசியமாகும். இதனை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
சுற்றுலாப் பயணிகளும் பரிசல் ஓட்டிகளும் பரிசல்களில் செல்லும்போது பாதுகாப்பு உடை அணிவது கட்டாயமாகும்.
ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சென்றுவர அனுமதி வழங்கப்படும்.
தனியாா் வாகனங்கள் பிற்பகல் 4.30 மணிக்கு பிறகு ஒகேனக்கல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படாது. எனவே சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும்போது அரசின் நிபந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.