மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் – முதலமைச்சர் பழனிசாமி

தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டிற்குவர உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மதுரையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி இதனை தெரிவித்துள்ளார்.

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இது தவிர, ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, வேளாண்மைக்கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி, திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் உள்ளன. 

இதில் சுமார் 1500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்டின்பட்டி மற்றும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் தலா 200 படுக்கைகள் உள்ளன.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பழைய மகப்பேறு பிரிவில் கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நோய் தொற்று அறிகுறி இருந்தால் தங்கி சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இருப்பினும் மதுரையை சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இருந்து ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்கு நிறைய பேர் வருகை தருகின்றனர்.

இதனால், வடபழஞ்சியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் அலுவலகத்தில் தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையில் 900 படுக்கைகள் கொண்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர்கள் மற்றும் ஐ.சி.யூ. என்று சொல்லப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மதுரையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார்.

சளி, காய்ச்சல் தொந்தரவு பற்றி வீடு வீடாக ஆய்வு செய்யப்படுகிறது. மாநகர் புறநகர் பகுதிகளில் கொரோனா படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா சிகிச்சைக்காக 900 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதே போல ரூ.25 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்படும்.

மதுரையில் 84 கொரோனா கட்டுப்பாட்டு மையங்களில் சிகிச்சையை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றும் தோப்பூரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே