கேரள சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டம்

கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழலில் கடும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கேரள சட்டப்பேரவை இன்று ஒரு நாள் மட்டும் கூடுகிறது.

முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் நிதி மசோதா தாக்கல் செய்தபின், காங்கிரஸ் எம்எல்ஏ வி.டி.சதீஷன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவார் எனத் தெரிகிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் கேரள சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

2005-ம் ஆண்டு உம்மன் சாண்டி அரசுக்கு எதிராக கொடியேறி பாலகிருஷ்ணன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன்பின் கொண்டுவரப்படவில்லை.

கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார்.

இது தவிர கரோனா விவகாரத்தைக் கையாளும் விதம், ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீது காங்கிரஸ் கட்சி வைத்துள்ளது.

ஆதலால், இன்று சட்டப்பேரவையில் பெரும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கலாம் எனத் தெரிகிறது.

140 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக அரசுக்கு 91 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 45 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அந்தக் கட்சிக்கு ஆதரவாக ஜோஸ் கே மானி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருந்தால் மட்டும் வலிமையாக அமையும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டுதான் ஜோஸ் கே மானி காங்கிரஸ் கட்சி வென்றுள்ளதால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கட்சிக் கொறடா உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், ஜோஸ் கே மானி மற்றும் அவரின் 5 ஆதரவு எம்எல்ஏக்களும் அவ்வாறு காங்கிரஸ் கட்சியின் உத்தரவுப்படி நடக்க வேண்டியதில்லை. நாங்கள் அதை முடிவு செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜோஸ் கே மானி தலைமையிலான 5 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தில் வாக்களிப்பார்களா என்பது தெரியவில்லை. பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ ஓ.ராஜகோபால் மட்டும் உள்ளார்.

இது தவிர திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகள் பராமரிப்புக்கு குத்தகைக்கு மத்திய அரசு ஏலம்விட்டதைக் கண்டித்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக கடந்த 20-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த 83 வயதான வீரேந்திர குமார் கடந்த மே 28-ம் தேதி உயிரிழந்தார். அந்த இடம் காலியாக இருப்பதால், அந்த ஓர் இடத்துக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

கடந்த ஜூலை 27-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல பிப்ரவரி மாதம் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பட்ஜெட்டுக்கான நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் அவை கூடியதும் முதலில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் காலை முதல் ஆன்டி ரேபிட் பரிசோதனை மருத்துவக் குழுவினரால் நடத்தப்படுகிறது. இன்று ஒருநாள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை எம்எல்ஏக்கள் யாருக்கேனும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் மாநிலங்களவைத் தேர்தலில் மட்டும் வாக்களித்து விட்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கில் தனி இருக்கைகள் உறுப்பினர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இருக்கையிலும் சானிடைசர், முகக்கவசம், ஃபேஸ்ஷீல்ட், கையுறை போன்றவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே