உயிர் உள்ள வரை காவிரியைக் காக்கப் போராடியவர் கருணாநிதி: ஸ்டாலின் பேச்சு

உயிர் உள்ள வரை காவிரி உரிமையைக் காக்கப் போராடியவர் கருணாநிதி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இன்று (மார்ச் 19) வெள்ளிக்கிழமை காலை மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

“காவிரி உரிமையை மீட்டுக் காப்பாற்றியவர் கருணாநிதி. அந்த உரிமையை மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

காவிரி பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கக் கோரி 1970ஆம் ஆண்டு முதல் கருணாநிதி போராடி வந்தார். அதன் விளைவாக, 1990ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. இதேபோல, இறுதித் தீர்ப்பையும் கருணாநிதியே பெற்றுத் தந்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து காவிரி மீட்புப் பயணம் நடத்தியது நாங்கள்தான்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி பிரதமரைச் சந்திக்கலாம் எனக் கோரினேன். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

கருணாநிதி தன் உயிர் உள்ள வரை காவிரி உரிமைக்காகப் போராடினார். காவிரி டெல்டாவில் உள்ள விவசாயிகளுக்கு கருணாநிதி எதுவும் செய்யவில்லை என முதல்வர் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே விவசாயி என்றால் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து இடைத்தரகர்கள் எனக் கொச்சைப்படுத்துகிறார்.

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காகப் பல்வேறு திட்டங்கள் உறுதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் கோரி வந்தும், எடப்பாடி பழனிசாமி பத்தாண்டுகளாக அறிவிக்கவில்லை. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அத்தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து நாங்கள் அறிவித்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி குறித்து நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வாக்குறுதி அளித்தோம். அப்போது, திமுக தவறான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இப்போது எப்படி அவர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிட்டோம் எனக் கூறிய முதல்வர் இந்தத் தேர்தலில் அல்வாதான் கொடுக்கப் போகிறார்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே