“முத்துவேலர் பேரனை வாழ்த்துகிறேன்” – கவிஞர் வைரமுத்து

பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு வைத்து அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில் மாவட்ட சிறப்பு பணி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

பட்டப் படிப்பு வரையிலான கல்வி விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும்.

அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி – விடுதிச் செலவை அரசே ஏற்கும்.

பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.

ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது!

அத்துடன் ஒரு கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் உறவினர் பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு இல்லம், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் , அரசு நல திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவில்
பெற்றோரிழந்த பிள்ளைகளுக்கு
5லட்சம் முதலீடு செய்து
தாயுமானவர் ஆகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒரு தலைமுறையின் தலைவன்
தானென்று
விரைந்து வினைப்பட்டு
உயர்ந்து நிற்கிறார்.

குழந்தைகளின் கண்ணீர்த்துளிகளை
முத்துக்களாக்கும் வித்தை தெரிந்த
முத்துவேலர் பேரனை
வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே