கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.
70 வயதான அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு முதல் வாரம் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து தமது தொகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னையிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், வயது மூப்பு, சக்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் நோயின் வீரியம் அதிகரித்து அவரது நுரையிரல் செயலிழக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பாக, அவரது மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், செல்வராசு, ராமலிங்கம் ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் வரிசையில் உள்ளனர்.
யார் இந்த வசந்தகுமார்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி, சுதந்திரப்போராட்ட தியாகி ஹரிகிருஷ்ண பெருமாள்-தங்கம்மை தம்பதிக்கு பிறந்தவர் வசந்தகுமார்.
1970களில் விற்பனையாளராக பணியாற்றி வந்த வசந்தகுமார், பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கினார்.
1978ல் வசந்த அண்ட் கோ என்ற பெயரில் மின் சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தார்.
பின்னர் தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபராக ஆனார் வசந்தகுமார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி ஆனந்தனின் சகோதரர் வசந்தகுமார்.
2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
2019ல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.