தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று தஞ்சாவூரில் பேசிய முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம்.
எந்தத் தேர்தல் வந்தாலும் எங்களைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் தேர்தல்.
ஒவ்வொரு முறையும் அதிமுக தலைமையில்தான் தேர்தலை சந்தித்துள்ளோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதலே தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர, தெலங்கானா முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்துடன், காவிதி நதிநீர் பங்கீட்டில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவாரூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கூட்டணி தலைமை குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தற்போது எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.