பாஜகவில் நாளை இணைகிறார் கராத்தே தியாகராஜன்..!!

சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நாளை பாஜகவில் இணைகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பல்வேறு முக்கியப் பிரமுகர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை தமிழக பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம் குமார் நாளை (பிப்ரவரி 11), பாஜக தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

சிவாஜி கணேசன், காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற கட்சியைத் தொடங்கி 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணியின் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். 

பின்னர் அக்கட்சியை வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியுடன் இணைத்து அதன மாநிலத் தலைவராக செயல்பட்டார். பின்னர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகினார்.

திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ராம்குமார், தந்தை சிவாஜி தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணியில் பொருளாளராக இருந்தவர்.

காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ராம்குமார், பாஜகவில் இணைவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் தென் சென்னை மாவட்ட முன்னாள் தலைவருமான கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களுடன் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே