கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழா..!!

கோவை மாவட்டத்தில் 2,400 கர்ப்பிணி பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சக்கரபாணி சீர் பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.

இதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் 48 இடங்களில் மையத்திற்கு 50 பேர் வீதம் 2,400 பேர் கலந்துகொள்ளும் விதமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற விழாவில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு சீர் பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தொற்று அதிகமாக இருந்த மாவட்டமான கோவையில், தற்போது எண்ணிக்கையில் 200 ஆக குறைத்துள்ளோம் என்றும், வருங்காலத்தில் மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் முழு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை 1,485 இடங்களில் தடுப்பூசிமுகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோவையில் முதல் தவணை தடுப்பூசி 23 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும், 2 தவணை தடுப்பூசி 6 லட்சம் பேருக்கும் மேல் போடப்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர் சக்கரபாணி, நோயை கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

அரிசி கடத்தலை தடுப்பதற்கென கோவை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார் வந்திக்கும் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாகவும், உள்ளாட்சி தேர்தலுக்காக இது நடைபெற வில்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். மேலும், அரசியல் நோக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே