குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டெல்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் ராணுவ அதிகாரிகள் வந்து பயிற்சி அளிப்பது வழக்கம். இந்நிலையில் இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது , பிற்பகல் 12:40 மணியளவில் கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. காலை முதலே அந்த பகுதியில் பனிமூட்டமான சூழல் நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
8 ஆண்டுகளில் 6 முறை விபத்து
mi 17 ரக ஹெலிகாப்டர்கள் கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை விபத்துக்குள்ளானது. 2013 ஜூன் 25, 2016 அக்டோபர் 19, 2017 அக்டோபர் 6, 2018 ஏப்ரல் 3, 2019 பிப்ரவரி 27, 2021 டிசம்பர் 8 (இன்று) விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிபின் ராவத் கடந்து வந்த பாதை
ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். வெலிங்டனில் ராணுவ சேவை கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்திய – சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி, தேர்ந்த அனுபவத்தை பெற்றார்.
பிபின் ராவத். காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பிபின் ராவத், அங்கு படைகளுக்கு தலைமை தாங்கினார். படிப்படியாக இந்திய ராணவத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரித்த பிபின் ராவத், கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார். தற்போது முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் பிபின் ராவத்துக்கு, ராணுவம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இந்தியாவின் முதல் தலைமை தளபதியாக இருந்து வந்தார்.