நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து தாமும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இவர் ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியின் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கடைசி நம்பிக்கையும் பொய்த்து கனவு கானல் நீராகியதை அடுத்து தமிழருவி மணியன் இத்தகைய முடிவை எடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என ஆயிரம் முறைக்கு மேல் ஊடகங்களிலும், பொதுவிடங்களிலும் அறுதியிட்டு கூறி வந்த தமிழருவி மணியனுக்கு, ரஜினியின் நேற்றைய அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

ரஜினிகாந்துக்காக கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆலோசனைகள் கூறி வந்த தமிழருவி மணியன், ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சிக்கு கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது உடல்நிலையை காரணமாக கூறி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்பை ரஜினி நேற்று வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து தாமும் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழருவி மணியன்.

இறப்பு தன்னை தழுவும் வரை இனி எப்போதும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் வித்தியாசம் தெரியாத அரசியலில் இனி சாதிக்க தனக்கு ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளால் பொதுவாழ்வுப் பண்புகள் பாழடைந்துவிட்டதாகவும்; மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என தாம் கனவு கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து கண்ணதாசன் விலகும் போது போய் வருகிறேன் எனக் கூறியதாகவும் ஆனால் தாம் அரசியலில் இருந்து போகிறேன்; இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

நேர்மைக்கும், உண்மைக்கும் மதிப்பில்லை என்றும் எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் தாம் கையேந்தவில்லை எனவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பணியாற்றி வந்த தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி அமைப்பு நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே