ஒரே பில்லில் ரூ.95,000, ரூ.52,000-க்கு மது வாங்கிய ‘குடி’மக்கள்

கரோனா தொற்றால் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் நேற்று பரவலாகத் திறக்கப்பட்ட நிலையில், ஒரு நபர் ரூ.95 ஆயிரத்துக்கு மதுபானம் வாங்கிய ரசீது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, பெங்களூருவில் 52 ஆயிரத்துக்கு ஒரே நபர் மதுபானம் வாங்கி அந்த ரசீது வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வலைத்தளங்களில் பரவ, அதற்குப் போட்டியாக ரூ.95 ஆயிரத்துக்கு ஒருவர் மதுவாங்கிய பில் களத்தில் இறங்கியது.

மது வாங்க நீண்ட நேரம் மதுபானக் கடைகளில் காத்து நின்றவர்களுக்கும், கூட்ட நெரிசலால் மதுபானக் கடைகளை காவல்துறையினர் மூடியதால் மது கிடைக்காமல் ஏமாந்தவர்களுக்கு எல்லாம் இந்த ரசீதுகள்தான் நேற்று பேசுபொருளானது.

கர்நாடகத்தில் நேற்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்த நிலையில், ஒரே நபர் ரூ.52,800க்கு மதுபானம் வாங்கிய ரசீது வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, ஒருவருக்கு கட்டுப்பாடுகளை மீறி அதிக மதுபானம் விற்றதாக விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் தான் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் அதிகபட்சமாக 2.6 லிட்டர் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் அல்லது 18 லிட்டர் பியர் தான் ஒரு நாளைக்கு ஒரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும்.

ஆனால் கட்டுப்பாடுகளை மீறி, தெற்கு பெங்களூருவில் உள்ள மதுபானக் கடையில் ஒரே நபருக்கு 13.5 லிட்டர் மதுபானமும், 35 லிட்டர் பியரும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க விதிகளுக்கு முரணானது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, 8 பேர் கொண்ட குழு இந்த மதுபானங்களை வாங்கியதாகவும், ஒரே ஒரு பண அட்டை மூலமாக தொகையை செலுத்தியதாகவும் கடை உரிமையாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே மங்களூருவில் ரூ.59,952க்கு மதுபானம் வாங்கிய ரசீதும் வலைத்தளங்களில் வைரலானது.

இதையெல்லாம் விஞ்சி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், ஒரே நபர் ரூ.95,347க்கு மதுபானம் வாங்கியிருக்கும் ரசீதும் வைரலானது.

ஆனால், அதில் வாங்கப்பட்ட இடம் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக கரோனாவை விஞ்சி அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மதுபானக் கடையில் காணப்படும் கூட்டம்தான்.

கூட்டம் என்றால் வெறும் கூட்டமல்ல.. கட்டுக்கடங்காத கூட்டம்.

இந்த ஊரடங்குக்கு இடையே இவ்வளவு அவசரமாக மதுபானக் கடைகளைத் திறக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலாக அமைந்திருப்பது அங்கு திரண்டு நிற்கும் குடிமகன்கள்தான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே