மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ – கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன், கடந்த 25 ந்தேதி மாலை 5:40 மணி அளவில் வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மூடப்படாமல் இருந்த 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். 

சிறுவன் சுஜித்தை மீட்க முதலில் தீயணைப்பு வீரர்கள், ரெஸ்கியூ ரோபோ மணிகண்டன், தமிழக பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்டன்ட் கலைஞர்கள் அன்பறிவு, ஐஐடி ஆராய்சியாளர்கள் என பலரும் சிறுவன் சுஜித்தை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணற்றுக்கு இணையான கிணறு தோண்டும் பணியும் கடுமையான பாறைகளால் கை கொடுக்கவில்லை.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க ஒவ்வொருவர் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்ட போதும் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக 10 அடி ஆழத்தில் இருந்து 25 அடி, 40 அடி, 65 அடி என நழுவி 88 வது அடிக்கு சென்றதால் மீட்புப் பணி மேலும் சவாலானது.

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீட்புப் பணிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கிச் சென்றாலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் நாளில் இருந்தே அங்கேயே தங்கி இருந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் அங்கேயே இருந்தனர். காவல்துறையினர் தன்னார்வலர்களும் பொறுப்புடன் கடமையாற்றினர்.

சிறுவன் சிக்கிய உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 10 அடி தூரத்தில் 1 மீட்டர் சுற்றளவில் 90 அடி ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் உள் வீரர்களை இறக்கி 10 அடி தூரத்திற்கு டிரில்லிங் செய்து சிறுவன் சிக்கியுள்ள குழாய்க்குள் சென்று சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி ஓ.என்.ஜி.சி 300 ரிக் எந்திரம், எல் அண்ட் டி கம்பெனியின் 350 ரிக் எந்திரம், ஆகியவற்றை கொண்டு ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடப்பட்டது.

அதுவும் பாறையில் துளையிட முடியாமல் தவித்ததால் பாறைகளை விரைவாக துளைத்தெடுக்கும் போர்வெல் லாரி வரவழைக்கப்பட்டது.

ஒரு மீட்டர் சுற்றளவுக்கு 6 இடங்களில் போர்வெல் துளை போட்டு, பின்னர் ரிக் எந்திரத்தால் உடைத்து எடுத்தனர். இதுவரை 65 அடிக்கு போர்வெல் துளையிடப்பட்ட 55 அடிக்கு ரிக் எந்திரம் உடைத்து துளையிட்டுள்ளது.

90 அடிக்கு துளையிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

சிறுவன் சுஜித் மீட்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், சிறுவன் விரைவாக மீட்கப்படவேண்டும் என்றும் பிரதமர் மோடி டிவிட் வெளியிட்டிருந்தார்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிறுவன் மீட்பு பணி குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டார்..!

பலூன் மூலம் மீட்பது, கம்பியை உள்ளே விட்டு மீட்பது என்று பலரது ஆலோசனைகளும், அறிவுரைகளும் மீட்பு பணியின் போது செயல்படுத்தப்பட்டாலும் சிறுவனை மீட்கும் பணி சவாலானது என்பதை விட பல சவால்களை தகர்த்து எரிந்து சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிகாலை 2:22 மணியளவில் சிறுவன் உயிரிழப்பை ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவித்தார், திங்கட்கிழமை இரவு 10:30 மணி அளவில் சிறுவன் சுஜித் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், சிறுவனின் உடல் அழுகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

5 நாட்களாக 80 மணி நேரம் சிறுவனை உயிருடன் மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்ற அனைத்து தாயுள்ளம் கொண்டவர்களின் வேண்டுதல்களும் வீணாகிபோனது தான் வேதனையின் உச்சம்..!

பயன்பாடில்லா மூடப்படாத தரைமட்ட ஆழ்துளை கிணறுகள் எத்தனை விபரீதமானது என்பதற்கு சிறுவன் சுஜித்தின் மரணம் ஒரு உதாரணம் ..!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே