மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்..!!

காணாமல் போன 16 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கைக் கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபிஷ், என்பவருக்கு சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகில் 05.05.2021 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பைபோர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 16 மீனவர்களுடன் மங்களூர் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அந்த 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தையும் 4 மீனவர்கள் மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

“டவ் தே” புயல் கடந்த பின்பு 16 மீனவர்களை தொடர்பு கொள்ள இயலாமலும் அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. இது தொடர்பாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காணாமல் போன மீனவர்கள் குறித்த தகவல் இதுவரை ஏதும் பெறப்படாதது அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமுதாய மக்களிடையேயும் பெரும் மனத்துயரத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால், அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே