அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (7.7.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், 89 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெட் சி.டி. ஸ்கேன் கருவி, 2 நேரியல் முடிக்கி கருவிகள், 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு தரப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.

அதன்படி, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அந்த வகையில், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், அரியலூர் தெற்கு கிராமத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 347 கோடி ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக 130 கோடி ரூபாய் நிதியுடன், கட்டடம் கட்டுவதற்காக கூடுதலாக 22 கோடி ரூபாய் நிதியும் வழங்கும்.

முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் 100 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால் 50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டடங்கள் 102 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டடங்கள் 125 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டடங்கள் போன்றவை 119 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும்.

மேலும், சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பெட் சி.டி. ஸ்கேன் கருவி மற்றும் நேரியல் முடிக்கி கருவி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைந்துள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நேரியல் முடிக்கி கருவி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஈரோடு மாவட்டம் – பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெரம்பலூர் – அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் – அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 24 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள்: என மொத்தம் 89 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கருவிகளை முதல்வர் பழனிசாமி இன்று அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அரசு தலைமைக் கொறடா எஸ். இராஜேந்திரன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத், இ.ஆ.ப, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே