ஜல்லிக்கட்டை ஏன் கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்துகொண்டேன் – ராகுல் காந்தி பேட்டி..!!

“தமிழ் கலாசாரத்தையோ, உணர்வையோ மத்திய அரசால் அழிக்க முடியாது” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டுக்கு பண்டிகை விழா காலத்தில் வந்துள்ளேன். ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்த்து மகிழ்ந்தேன். தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏன் இந்த திருவிழாவை கொண்டாடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். ஜல்லிக்கட்டு போட்டியால் காளைகளுக்கு ஆபத்து என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், இந்த போட்டிகளை இன்று கண்கூடாக பார்த்தபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிய வந்தது. ஒருவேளை யாருக்காவது காயம் ஏற்படுவதாக இருந்தால் அது இளைஞர்களுக்கே ஏற்படுகிறது” என்று கூறினார்.

“ஆனால், டெல்லியில் உள்ள மத்திய அரசு தமிழ் கலாசாரம், மொழி, தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து விடலாம் என்று நினைக்கிறது. ஆனால், தமிழ் மக்களையோ அவர்களின் கலாசாரத்தையோ உணர்வுகளையோ எவராலும் ஒடுக்க முடியாது. இந்த நாட்டில் உள்ள மற்ற மொழி, கலாசாரத்தை போலவே தமிழ் மக்களின் கலாசாரமும் இந்த நாட்டின் உன்னதமான அடையாளம்,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

“இந்தியாவில் பல மொழிகள், சிந்தனைகள் உள்ளன. அவை அனைத்தும் நமது பலம். நான் தமிழகத்துக்கு தொடர்ந்து வருவேன். தமிழர்களிடம் இருந்து நான் அதிகமாக கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பதை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்.”

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு விரிவாக பதிலளித்தார் ராகுல் காந்தி.

“மத்திய அரசு விவசாயிகளை மட்டும் அலட்சியப்படுத்தவில்லை, அவர்களை அழித்து விட பார்க்கிறது. ஏனென்றால், தங்களுக்கு நெருக்கமான இரண்டு, மூன்று நண்பர்களுக்கு சாதகமாக செயல்பட அரசு விரும்புகிறது. விவசாயிகளின் நிலத்தையும் அவர்கள் விளைவிக்கும் பொருளையும் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு வழங்க அரசு விரும்புகிறது,” என்று ராகுல் கூறினார்.

“இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள்தான். அவர்களை அழித்து விட்டு நாடு வளம் பெற வாய்ப்பில்லை. விவசாயிகள் பலவீனமடைந்தால் நாட்டின் வளர்ச்சி பலவீனமாகும். நீங்கள் (நரேந்திர மோதி) இந்திய மக்களுக்கு பிரதமரா அல்லது இரண்டு மூன்று தொழிலதிபருக்கு மட்டும் பிரதமரா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்திய பகுதிக்குள் சீன ஊடுருவல் நடைபெறுவது குறித்தும் ராகுல் காந்தி பேசினார்.

“இந்திய பிராந்தியத்துக்குள் சீனா என்ன செய்கிறது, இந்திய பகுதிக்குள் நுழைய அவர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்? இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“நான் விவசாயிகளை தொடர்ந்து ஆதரிப்பேன். பஞ்சாப் பேரணியின்போது கூட விவசாயிகளுக்கு ஆதரவாகவே பேசினேன். அவர்களுடன் தொடர்ந்து நான் இருப்பேன். தற்போது விவசாயிகள் விடுக்கும் குரல்களின் அழுத்தம் காரணமாக அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் அரசு திரும்பப்பெறப் போகிறது. எனது இந்த வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே