தேமுதிகவினர் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகள் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 13) சேலம் மாவட்டம், ஓமலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நீட் தேர்வு நர்சிங் கல்லூரி வரை நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து…

அதிமுகவைப் பொறுத்தவரையில் நீட் தேர்வு தமிழகத்திலே இருக்கக் கூடாது என்பது தான் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளீர்கள், பல இடங்களில் அதிமுகவினரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரே?

இது எல்லா கட்சியிலும் உள்ளது தான். அதிமுகவை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டாம். எல்லாருமே ஆசைப்படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால் வருத்தத்தை தெரிவிக்கின்றார்கள். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. அனைவரிடமும் பேசி சமாதானப்படுத்துவோம்.

ஏற்கெனவே, அம்மா உணவகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையிலே கலைஞர் உணவகம் கொண்டுவருவோம் என கூறியது குறித்து…

தெரியவில்லை, அதை நான் படித்துப் பார்த்துதான் கூற வேண்டும். அறிக்கை இன்னும் முழுவதுமாக கிடைக்கவில்லை. கிடைத்த பின்னர் படித்துப் பார்த்து தான் கருத்து கூற முடியும்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இன்னும் உங்களுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து…

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு சில கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். பாஜகவினரிடமும், முன்னாள் முதல்வர் ரங்காசாமியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமூகமாக பேச்சுவார்த்தை முடிவடைந்து அதிமுகவின் சார்பில் எங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். திமுகவில் கூட பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூட்டணியே அறிவித்தார்கள். கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

கூட்டணியில் இருந்து தேமுதிக, இன்றைக்கு புதிய தமிழகம் வெளியேறியுள்ளனர் அது குறித்து…

புதிய தமிழகம் எங்களுடன் கூட்டணியில் இல்லை. அவர்கள் ஏற்கெனவே முறித்துவிட்டு சென்றுவிட்டனர்.

தேமுதிக விலகியது அதிமுகவுக்கு இழப்பா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றதே அது குறித்து…

அவர்கள் பக்குவம் இல்லாத அரசியல்வாதிகள் என்றுதான் கருதுகிறேன். கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகின்ற சம்பவம். வெளியேறியவுடன் இப்படி நினைத்தவாறு என்று பேசுவது சரியல்ல. அது கூட்டணிக்கும் அழகு அல்ல. கட்சியுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக சென்று நிற்பதில் தவறு இல்லை. ஆனால், ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு.

பாமகவுக்கு கொடுத்த மரியாதை தேமுதிக கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே அது குறித்து

நானே பேசினேன். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது. வாக்கு வங்கி என்ற ஒன்று உள்ளது. நீங்களே என்ன செய்கிறீர்கள், இவருக்கு 40 சதவீதம் இவருக்கு 36 சதவீதம், இவருக்கு 7 சதவீதம் என நீங்களே பத்திரிக்கையிலும், ஊடகத்திலும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு ஏற்றார் போலத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே