நாளை (நவ. 14) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் தமிழக மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னை மகாலட்சுமி துணையுடன் நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் திருமால் அழித்த தினமே தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இத்தீபத் திருநாள், அறத்தின் ஆட்சியையும், ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகவும், காரிருள் மறைந்து, அறிவொளி பிறந்து, இன்பமும், இனிமையும் நிறைந்த நன்னாளாகவும் விளங்குகிறது.
இத்தீபாவளித் திருநாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகி, நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.