1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆகும். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன, இந்தியக் குடியரசுக் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் , புதிய தமிழகம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி, சிறுபான்மை மக்கள் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

1900–1947

தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு டாக்டர் சி. நடேசனால், டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோருடன் இணைந்து நிறுவப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

1947–1962

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராசர் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பாலானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் ‘பொற் கால ஆட்சி’ முக்கியக் கூறாக விளங்கியது. இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கினார்.

சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

1962–1967

1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தனித் தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றையப் பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளைத் தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையைக் கைவிட்டார். 1960களில் திமுக போராடிய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளே தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றன.

1967–1971

அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழிக் கொள்கையும், சுயமரியாதைக் கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கியப் பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப் பின்னர் எம். ஜி. ஆர் உதவியால் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்தார். கருணாநிதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தனி கட்சியைத் தொடங்கினார்.

1977–1990

தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

1991–2006

1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் 2004ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. 2006ம் ஆண்டு தமிழக அரசியலில் முதன் முறையாகப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக, காங்கிரஸ் கட்சியின் உதவியால் கூட்டணி ஆட்சி அமைத்தது.

2011-2015

திமுக-காங்கிரஸ் கூட்டணியின் படுதோல்விக்குப் பின் அஇஅதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

2016

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அஇஅதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 89 இடங்களில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவரானார். இம்முறை காங்கிரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தன.

குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டில் 4 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் முதன்முறையாக கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு கடந்த 31 சனவரி, 1976 முதல் 30 சூன், 1977 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 17 பெப்ரவரி, 1980 முதல் 6 சூன், 1980 வரையில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்குப் பின்னரும், 30 சனவரி, 1988 முதல் 27 சனவரி, 1989 வரையில் ஜானகி எம்ஜிஆர் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோதும், இறுதியாக, கருணாநிதி தலைமையிலான ஆட்சியைக் கலைத்துவிட்டு 30 சனவரி 1991, முதல் 24 சூன், 1991 வரையிலும் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

காமராஜர், ஈ. வெ. ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே