பிறப்பு : 

பால கங்காதர திலகர் என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • திலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கிய அவர் “டெக்கான் கல்லூரியில்” சேர்ந்து கல்விக் கற்று, 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். 
  • பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக் கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், ‘நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்’ என்றனர்.
First leader, Indian Independence Movement
  • அதற்கு திலகர், “என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர்.
  • அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்!” என்றார்.
  • அவர் நினைத்தது போலவே, சட்டம் பயின்று பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.  

விடுதலைப் போராட்டத்தில் திலகரின் பங்கு

1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார்.

இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றியும் எழுதப்பட்டது.

இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

1885 ஆம் ஆண்டு, திலகர் காங்கிரசில் சேர்ந்தார். 1896  ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் தீவிரமாக பரவியது.

அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது.

விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898 சென்னை மற்றும் 1899 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.

அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர், 1907 ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது.

திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர்.

இதனால், 1906 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திலகர், சிறையில் “கீதா ரகசியம்” என்ற நூலை எழுதினார்.

இறப்பு

தன்னுடைய இறுதி காலம் வரை, பாரத மக்களைக் காப்பாற்றி விடுதலைப் பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் காலமானார்.

திலகரின் மறைவு, இந்திய விடுதலைப் போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.

ஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர்.

ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகரின் கொள்கைகள் போற்றத்தக்க ஒன்றாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே